நீ
நனைய
மழை குளிக்கிறது
உன்னழகில்!
ஊரிலிருந்து
நீ வருவாயென
நேற்றே வந்து
வாசல் தெளித்துப் போயிருந்தது
மழை!
நனைந்து சுகித்திருந்த
உன்னை அம்மா
இழுத்துப் போக
சோவென அழத்தொடங்கியது
மழை!
மனம்
தோகை விரித்தாடுகிறது;
ம்,
அது நீ
வருவதற்கான அறிகுறி!
உன்னை ஒருமுறையாவது
தொட்டுப் பார்க்க முடியவில்லையே
என்ற சோகத்திலேயே
கருப்பாகிப் போனது
உன் நிழல்!
ஒவ்வொரு முறை
நான் கோவில் செல்லும்போதும்
உந்தன் கூந்தல் உதிர்ப் பூவொன்றை
சூடக் கேட்டு
நச்சரிக்கிறான் கடவுள்!
கோவில் விட்டு
நீ வெளிவரும்போது
பூக்கடை கிழவி கத்துகிறாள்
அய்யோ!சிலை ஒண்ணு
கோவில்விட்டு போகுதுன்னு!
உன்னைப் பற்றி
எழுத எழுதவே
அழகாகிறது என் தமிழ்!
தரையில் நீ பதித்திருந்த
தடத்தை கோலமென
சுற்றி புள்ளி வைக்கிறது
மழை!
நேரம் கிடைக்கையில்
கொஞ்சம் கற்றுக்கொடு
உன்னைப் போல்
சிணுங்க
உன் கொலுசுகளுக்கு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment